1 மதுரைக் காஞ்சி
(தலையாலங்கானத்துச்
செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை
மாங்குடி
மருதனார் பாடியது)
உலகைச்
சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
தவாப் பெருக்கத்து அறா
யாணர் 210
அழித்து, ஆனாக்
கொழுந்திற்றி
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு, ஆனாக் கூர்
நறவின்
தின்று, ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஒண்பல்
வெறுக்கைப் 215
பயன் அறவு அறியா வளம் கெழு
திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு
முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி
செறிப்பப்
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ,
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ, 220
மறம் கலங்கத் தலைச் சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி,
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறி,
சூடுற்ற சுடர்ப் பூவின் 225
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக்
கள்ளின் இரும் பைக்கலம் செல
உண்டு,
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப
பணியார் தேஎம் பணித்துத் திறை
கொண்மார் 230
பருந்து பறக்கல்லாப் பார்வல்
பாசறைப்
படுகண் முரசம் காலை இயம்ப,
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து
இறுத்த
பணை கெழு பெருந்திறல் பல்வேல்
மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு
முந்நீர்த் 235
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு
கழிந்தோரே! (210 – 237)
பொருளுரை: கெடாத மிகுதியையுடைய நீங்காத வளமையும், உண்டும்
குறையாத கொழுப்புடைய தசையும்,
உண்டும் குறையாத பல வகையான சோறும், குடித்தும் குறையாத மிக்க கள்ளும், தின்றும்
குறையாத உணவு வகைகளும் தங்குதல் உடைய, நிலம் சுமக்க முடியாத ஒளியுடைய பொருட்களையுடைய, எப்பொழுதும்
பயன் கெடுதல் அறியாத செல்வமுடைய அரண்மனைகளில், யாழின்
நரம்பு போன்று பாடும் நயத்துடன் தோன்றும் பாட்டினையுடைய விறலியர் தம்முடைய வளையல்
அணியாத கைகளில் வளையல்களை அணிவிக்கக் கொடுத்து, அகவல்
பாணர்கள் மகிழ்ச்சி அடையும்படி களிற்று யானைகளை அவர்களுக்குக் கொடுத்து, நட்பில்
கலந்தவர்கள் மகிழக் கைப்பற்றிய அரண்களில் உள்ள பொருட்களையும் அவர்களுக்குக்
கொடுத்து,
பகைவர்களின் மறம் கெடுமாறு அவர்களிடத்தில் சென்று, வாளினால்
செய்த போரில் அவர்கள் வருந்தி வென்றதற்குக் காரணமான அவர்களின் முயற்சியைப்
பாராட்டி,
விடியற்காலையில் வந்த பாணர்களுக்குத் தேருடன் குதிரைகளையும் கொடுத்து, சூடுதல்
கொண்ட ஒளியுடைய வஞ்சி மலர்களையும் பூசிப் புலர்ந்த நறுமணமான சந்தனத்தையுமுடைய
சிறந்த படைத் தலைவர்களைச் சுற்றமாகக் கொண்டு, கள்ளையுடைய
பெரிய தோல் குப்பிகள் வற்றும்படிக் குடித்து, பணிந்தவர்களின்
நாடுகள் தன் ஏவல் கேட்டு நடக்க,
பணியாதவர்களின் நாடுகளைப் பணியச் செய்து அவர்களிடம் திறை கொள்ளும்பொருட்டு
உயரப்பறக்கும் பருந்துகளும் பறக்கமுடியாத உயர்ச்சியுடைய அரண்மனைகளின் பாசறைக்கண், ஒலிக்கின்ற
கண்ணையுடைய பள்ளியெழுச்சி முரசம் அதிகாலையில் ஒலிக்க, பகைவர்களுக்குக்
கேடு உண்டாகும்படி வென்று,
வேண்டிய நிலங்களில் சென்று தங்கின, வெற்றி முரசுகளையுடைய பல வேல்களை உடைய மன்னர்கள், கரையை
இடித்து முழங்கும் செறிந்த கரிய கடலின் அலைகள் குவிக்கின்ற மணலினும் பலர் ஆவார்கள், தங்கள்
புகழ் எங்கும் பரவும்படி,
அகன்ற இடத்தையுடைய இந்த உலகை ஆண்டு, பிறவியை நீக்க முயலாது மாண்டவர்கள்.
2.
அகநானூறு
பாடியவர் – சாகலாசனார் மருதத்
திணை – தலைவி
தலைவனிடம் சொன்னது
நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்
மாசு இல் அங்கை, மணி மருள் அவ்வாய்,
நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் 5
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள், யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணிப்
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
“வருக மாள என் உயிர்” எனப் பெரிது உவந்து 10
கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன்,
“மாசு இல் குறுமகள். எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு” என யான் தற்
கரைய வந்து விரைவனென் கவைஇ,
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா 15
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந, வானத்து
அணங்கு அருங்கடவுள் அன்னோள், நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே. 19
பொருளுரை:
நீர்நாய்களையுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் தாதினையுடைய நடுப்பகுதியை
சூழ்ந்த உள் இதழ்களை அடுத்துள்ள இதழ்களைப் போல் இருக்கும் குற்றமற்ற அழகிய
உள்ளங்கையையும், பவளம் போன்று சிவந்த வாயினையும், நாவால்
கற்று பேசாத கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய சொற்களையுமுடைய யாவரும்
விரும்பும் பொற்தொடியை அணிந்த நம் புதல்வனை, அவன்
சிறு தேர் ஓட்டி விளையாடிய தெருவில் தனியாக இருப்பதைக் கண்டு,
கூர்மையான பற்களையுடைய உன்னுடைய பரத்தையான இளம் பெண் அணுகினாள்.
காணுவதற்கு எவருமே இல்லாததால், உன்னைப் போல்
அவன் இருப்பதைத் தன்னுடைய மனதில் எண்ணி, பொன் அணிகள்
அணிந்த இள முலைகளைக் கொண்ட அவள், “வருக என்னுயிரே” என்று மிகவும் மகிழ்ந்து,
அவனை அணைத்துக் கொண்டு நின்றாள். அவளைக் கண்ட நான் நின்ற இடத்திலிருந்து
விலகவில்லை. “குற்றமில்லாத இளம் பெண்ணே! எதற்காகக் கலங்குகின்றாய் நீ?
நீயும் இவனுக்குத் தாய் தான்” என்று நான் கூறி விரைவாக
வந்து அவளை அணைத்துக் கொள்ள, அவள் தான் செய்த களவை கண்டு கொண்டவரின் முன் உடன்பட்டு
நிற்பவர் போலத் தன்னுடைய தலையைக் கவிழ்த்து, நிலத்தைத்
தன்னுடைய காலால் கீறி நின்றாள். அவளுடைய நிலையைக் கண்டு, நானும்,
அவளை விரும்பினேன் அல்லவா தலைவா? வானத்தில்
உள்ள கடவுளான அருந்ததியைப் போன்றவள், உன்னுடைய
மகனுக்குத் தாய் ஆவது பொருத்தம்.
3.
நெடுநல்வாடை
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
வெள்ளி வள்ளி
வீங்கு இறைப் பணைத்தோள்,
மெத்தென்
சாயல் முத்து உறழ் முறுவல்,
பூங்குழைக்கு
அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்
மடவரல்
மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி
அரும்பின் பைங்கால் பித்திகத்து 40
அவ்விதழ்
அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய்
விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும்
மலரும் தூஉய்,
கைதொழுது,
மல்லல் ஆவணம்
மாலை அயர (36-44)
பொருளுரை: வெள்ளைச் சங்கு வளையல்களையும், இறுகின
முன்கையையும்,
மூங்கில் போலும் தோளையும்,
மென்மையான சாயலையும்,
முத்தைப் போன்ற பற்களையும்,
சிறப்பான காதணியின் அழகிற்குப் பொருந்திய உயர்ந்த அழகிய ஈரக்கண்களையும்
மடப்பத்தையும் உடைய பெண்கள்,
பூந்தட்டிலே இட்டு வைத்த மலரும் பருவம் அமைந்த பச்சைக் காம்பைக் கொண்ட, பிச்சி
மலர்களின் அழகிய இதழ்கள் மலர்ந்து நறுமணம் கமழ, நேரத்தை
அறிந்து, இரும்பினால்
செய்த விளக்கின் எண்ணெய்யைக் கொண்ட திரியைக் கொளுத்தி, நெல்லும்
மலரும் தூவி,
கையால் தொழுது,
வளப்பமான கடைவீதியில்,
மாலை நேரத்தில் கொண்டாட,
4.
குறுந்தொகை
பாடியவர்- தொல்கபிலர்,
குறிஞ்சித்
திணை – தலைவன் சொன்னது, தோழி
கேட்கும்படி
அமிழ்து பொதி
செந்நா அஞ்சவந்த
வார்ந்து
இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில்
அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில்
அம்ம,
இவ்வூரே! மறுகில்,
நல்லோள்
கணவன் இவன் எனப் 5
பல்லோர் கூற, யாஅம்
நாணுகம் சிறிதே.
பொருளுரை: அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற
சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும்
கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறி)
பெறுவேனாக. நான் அவளைப் பெற்ற பின், இந்த
ஊரார் அதை அறிந்து கொள்ளட்டும். அவ்வாறு, ஊரார்
பலரும் தெருவில் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும் போது, நாங்கள்
சிறிது நாணமடைவோம்.
5.
புறநானூறு
பாடியவர்: அரிசில் கிழார், பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன், திணை: பெருந்திணை, துறை: குறுங்கலி, தாபத நிலை
அன்னவாக நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம் அடு போர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
பரிசில் நல்குவையாயின், குரிசில், நீ
நல்காமையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும், நின் திருந்திழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன
ஒலிமென் கூந்தல் கமழ் புகை கொளீஇத்
தண் கமழ் கோதை புனைய,
வண் பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே.
பொருளுரை: அத்தன்மையுடையவாக,
உன்னால் தரப்பட்ட பெறுதற்கு அரிய அணிகலனையும் செல்வத்தையும் பெறும் விருப்பம்
எமக்கு இல்லை, கொல்லும் போரினைப் புரியும் பேகனே! சிறிய யாழில்
செவ்வழிப் பண்ணை இசைத்து, உன்னுடைய வலிய நாடான மலைநாட்டை நான் பாட,
என்னை விரும்பி நீ பரிசில் தருவாயாயின், தலைவனே,
நீ அருள் புரியாமையால், கண்டவர்கள் இரங்க மெலிந்து, அரிய
துயரத்தால் வருந்தும் திருந்திய அணிகலன் அணிந்த உன்னுடைய இளைய மனைவி,
தழைத்த மயிலின் தோகை காற்றில் குவிந்தாற்போல் உள்ள தன் அடர்ந்த மென்கூந்தலில்
நறுமணம் கமழும் புகையை ஊட்டி, குளிர்ந்த மணங்கமழும் மாலையைச் சூடுமாறு,
விரைந்து செல்லும் குதிரைகளை உன்னுடைய உயர்ந்த தேரில் பூட்டுவாயாக!
Comments
Post a Comment