நவீனக் கவிதைகள்
1.
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை
நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது
சாரல் மழை பெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள் வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்தது வந்து கொண்டிருந்தேன்
மனசுகிடந்து அடித்துக்கொள்ள (கவிஞர் விக்ரமாதித்யன்)
2. பணி செய்து கிடத்தல்
துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்
ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்
ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்தபடியிருக்கிறார்
அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்
இளம் பெண்கள்
இதை ஓய்வென்று நம்பவில்லை நான்
இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது
எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை. (கவிஞர் இசை)
3.
காலத்தின் இலை
ஒரு இலை விழுவதைப்பார்த்து
ஒவ்வொரு இலையும்
விழுகிறது
காண காண
எல்லாம் ஓர் இலை
எப்போதும்
முப்போதும்
விழாத இலை
அது ஆதியுமின்றி அந்தமுமின்றி அந்தரத்திலேயே
நிகழ்த்திக்காட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு தொடக்கமும் இல்லை
ஒரு முடிவும் இல்லை என்பதான ஒரு விளையாட்டை.
(கவிஞர் அர்ஜுன்ராச்)
4.
மெய்மையின் சுவை
ஆயிரம் விளக்குகள்
நின்றொளிரும் மண்டபத்தில்
அமர்ந்திருந்த எனக்குப்
பேரிருளைக்
கணம் கணமாகச் சென்றடையும்
உன்மத்தம் கூடியது
முதல் விளக்கை ஊதி அணைத்தேன்
அடுத்த விளக்கை அணைத்தேன்
ஒவ்வொரு விளக்காக
அணைத்தவாறே சென்றேன்
கடைசி விளக்கின் முன் அமர்ந்து
சூழப் பந்தலிட்ட இருளைக்
கண்ணுற்றேன்.
அகப்பெருங்களிப்பில்
கடைசி விளக்கையும்
ஊதி அணைத்தேன்.
வெறும் இருளுக்கும்
சுடர் இருந்த இருளுக்கும்
வேறு வேறு சுவை. (கவிஞர் கார்த்திக்
நேத்தா)
5.
எண்ணும் எழுத்தும்
சொல்லில் சுருக்கிட்டு
நாள் கணக்கில் காத்திருந்து
நான் பிடிக்கின்ற
முயலுக்கெப்போதும்
மூன்றே கால்;
இதைப் படிக்கும் நீங்கள்
இருக்காதென மறுத்து
எப்படியது சாத்தியமென
எண்ணத் தலைப்படுவீர்களானால்
அப்போது,
அச்சிட்ட இக்காகிதத்தை விட்டு
அடுத்திருக்கும் கானகத்துள்
ஓடி மறையுமதற்கு
ஒருக்கால்
நாமெல்லோரும் நம்பும்படியாக
நான்கு கால் இருக்கலாம். (கவிஞர்
மோகனரங்கன்)
Comments
Post a Comment